ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக - உள்ளாட்சி தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள் : வாக்குச்சாவடி மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்கள்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத் துடன் வாக்களித்தனர்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு மற்றும் கணியம்பாடி ஒன்றியங்களில் உள்ள 5 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 50 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர்கள், 87 ஊராட்சி மன்ற தலைவர்கள், 697 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 839 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் களத்தில் 2,508 வேட்பாளர்கள் உள்ளனர்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம் மற்றும் சோளிங்கர் ஒன்றியங்களில் உள்ள 760 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று வாக்குப்பதிவு நடை பெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற 4 ஒன்றியங்களில் உள்ள 7 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 71 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர்கள், 143 ஊராட்சி மன்ற தலைவர்கள், 929 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 1,150 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் களத்தில் 3,377 பேர் உள்ளனர்.

திடீர் மின்தடை

வேலூர் அருகேயுள்ள பெருமுகை ஊராட்சியில் நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்க இருந்த நேரத்தில் திடீர் மின்தடை ஏற்பட்டதால் வாக்குப் பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, டார்ச் லைட், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தகவலை அடுத்து மின் வாரிய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மின் விநியோகத்தை சரி செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர் அடுத்த அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட இலவம் பாடி ஊராட்சி அரசு உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 3 ஊராட்சி ஒன்றியங்களில் 469 வாக்குச்சாடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை நேரங்களில் நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பதற்கு பதிலாக அதிக வாக்காளர்கள் இருக்கும் இடங்களில் 2 அல்லது 3 பிரிவுகளாக பிரித்து வாக்காளர்கள் விரைவாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 7 வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். வாக்குகள் எண்ணப்படும் நாளில் தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பீஞ்சமந்தை மலைகிராம சாலை மழையால் மோசமாக உள்ளது. மாற்று ஏற்பாடாக அமிர்தி வழியாக வாக்குப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை அலுவலர்கள் வாகனங் களில் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளில் விடுமுறை வழங்காத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண் டியன் நேற்று ஆய்வு செய்தார். காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈராளச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரக்கோணம் ஒன்றியம் புத்தூர், மேல்பாக்கம், தணிகைபோளூர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார்.

வாக்குப்பதிவு நிலவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 8.05%, காலை 11 மணி நிலவரப்படி 24.23%, நண்பகல் 1 மணி நிலவரப் படி 41.17%, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 54.50% வாக்குகள் பதிவாகியிருந்தன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 7.45%, காலை 11 மணி நிலவரப்படி 22.19%, நண்பகல் 1 மணி நிலவரப்படி 51.29%, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 63.81% என பதிவாகியிருந்தன.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் மற்றும் ஆலங்காயம் ஒன்றியப்பகுதிகளில் 4 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 16 பேரும், 42 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து 41 இடங்களுக்கு 140 பேரும், 71 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் 70 இடங்களுக்கு 288 பேரும், 591 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 75 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் 516 பதவிகளுக்கு 1,723 பேர் என 631 இடங்களுக்கு 2,167 பேர் தேர்தலில் களத்தில் இருந்தனர்.

2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை முதல் வாக்குப்பெட்டிகள், தேர்தலுக்கு தேவையான பொருட்கள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இருந்து தகுந்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, நேற்று காலை 6 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் தயார் நிலையில் இருந்தன.

மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மின்னூர், மிட்டாளம், பெரியாங்குப்பம், வீராங்குப்பம், பாலூர், வடபுதுப்பட்டு, அகரம், சின்ன பள்ளிக்குப்பம், கீழ் முருங்கை, குளிதிகை ஜமீன், கூத்தம்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் காலையில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆலங்காயம் ஒன்றியத்தில், செட்டியப்பனூர், கிரிசமுத்திரம், கொத்தக்கோட்டை, கோவிந் தாபுரம், வள்ளிப்பட்டு, வளை யாம்பட்டு, பள்ளிப்பட்டு, ரெட்டியூர், வெள்ளக்குட்டை, பெத்த வேப் பம்பட்டு, கொல்லகுப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளில் வாக்குப்பதிவு விறு,விறுப்பாக நடைபெற்றது.

முன்னதாக ஆலங்காயம் மற்றும் ஆம்பூரில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் பார்வையிட்டு அங்கு மேற் கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

வாக்கு சதவீதம் சரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாதனூர் மற்றும் ஆலங்காயம் ஒன்றிய ஊரகப் பகுதிகளில் தேர்தலில் வாக்களித்தவர்களின் விவரம் நேற்றிரவு வெளியானது. அதன்படி, ஆலங்காயம் ஒன்றியத்தில் 94 ஆயிரத்து 927 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 71 ஆயிரத்து 328 பேர் நேற்று வாக்களித்துள்ளனர். மாதனூர் ஒன்றியத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 188 வாக்காளர்களில், 88 ஆயிரத்து 936 பேர் வாக்களித்துள்ளனர்.

அதன்படி, 2-ம் கட்ட தேர்தலில் 73.48 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

கடந்த 6-ம் தேதி முதற்கட்ட தேர்தல் 4 ஒன்றியங்களில் நடைபெற்றதில் 78.88 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது 2-ம் கட்ட தேர்தலில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாக்கு சதவீதம் ஏறத்தாழ 5.4 சதவீதம் குறைந்துள்ளது.

தேர்தல் புறக்கணிப்பு

நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி எஸ்சி (பெண்கள்) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், நாயக்கனேரி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு இதுவரை அங்கு வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் பொது பிரிவினருக்கு இடம் ஒடுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ஒரு சிலரே உள்ள எஸ்சி பிரிவினருக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டதை திரும்ப பெறக்கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நாயக்கநேரி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ள நிலையில் நேற்று 20 பேர் மட்டுமே வாக்களித்தனர். மற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித் துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்