ஒரு வாரத்தில் நூல் விலை கிலோவுக்கு ரூ.22 உயர்வு செயற்கை விலையேற்றத்தை தடுக்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

கடந்த ஒரு வாரத்தில் ஒரு கிலோ நூலின் விலை செயற்கையாக ரூ.22 உயர்ந்துள்ளதாக விசைத்தறியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ஆர்டர்களை முடிக்க முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு கிலோ பஞ்சு ரூ.153.50-க்கு விற்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 50 காசு உயர்ந்து ரூ.154-ஆக இன்று வரை நீடிக்கிறது. ஆனால், கடந்த 1-ம் தேதி 30 கவுண்ட் ஒரு கிலோ ரயான் நூல் கோன் ரூ.218-க்கு விற்பனையானது. கடந்த 7-ம் தேதியன்று 240 ரூபாயாக உயர்ந்துள்ளது. 7 நாளில் கிலோவுக்கு 22 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதமாக பஞ்சு விலை உயராத நிலையில், செயற்கையாக நூல் விலை உயர்ந்துள்ளது.

இதனால், விசைத்தறியாளர்களும், ஜவுளி உற்பத்தி செய்வோரும் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். கடந்த மாத நூல் விலையை வைத்து துணிக்கான ஆர்டர் பெற்றவர்கள், தீபாவளிக்காக மொத்த ஆர்டர் பெற்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நூல் விலை உயர்ந்துள்ள நிலையில், துணி ஒரு மீட்டர் ரூ.30.50-லிருந்து ரூ.32 ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. நூல் விலை ஒரு ரூபாய் உயர்ந்தால் துணி விலை 25 காசு உயர வேண்டும். நூல் விலை ரூ.22 உயர்ந்ததால் துணி விலை ரூ.5.50-க்கு மேல் உயர்த்த வேண்டும். பிற செலவுகளை கணக்கிட்டால் ரூ.6.30 உயர்ந்தால் மட்டுமே, துணி உற்பத்தி நஷ்டம் இல்லாமல் இருக்கும்.

துணி விலை உயராத நிலையில் நூல் விலை உயர்ந்துள்ளதால், வாங்கிய ஆர்டரை ரத்து செய்து, விசைத்தறி ஓட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளனர். செயற்கையாக நூல் விலை உயர்வு என அனைவரும் அறிந்த நிலையில், அரசு இதனை தடுக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே நூல் விலையை உயர்த்த வேண்டும்.

இவ்வறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்