லாரியில் பாரம் ஏற்று, இறக்கு கூலியை சரக்கு உரிமையாளர்கள் ஏற்க வேண்டும் : லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் வலியுறுத்தல்

‘லாரியில் சரக்கு ஏற்ற, இறக்க ஆகும் கூலியை சரக்கு உரிமையாளர்களே ஏற்க வேண்டும்,’ என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.

சேலத்தில் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியது:

கரோனா பரவல் காலக்கட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக லாரி தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால்லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

படிப்படியாக இயல்பு நிலை திரும்பிய போதிலும் பெரும்பாலான ஆலைகள் இயங்காத காரணத்தால் சரக்கு போக்குவரத்து தொழில் பாதிப்படைந்து, லாரி உரிமையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

லாரி உரிமையாளர்களின் வருவாய் இழப்பை சமாளிக்கும் வகையில் செலவினங்களை குறைக்க ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஏற்று கூலி, இறக்கு கூலி உள்ளிட்ட அனைத்து விதமான கூலிகளையும், சரக்கு உரிமையாளர்களே ஏற்க வேண்டும்.

தமிழகத்தில் லாரிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சரக்கு போக்குவரத்து இல்லாத காரணத்தால் வாடகை உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூலி மாற்றம் வரும் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இந்த முறையில் இனி எந்த மாற்றமும் செய்யப்படாது.

திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல டீசல் விலையை குறைக்க முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். டீசல் விலை குறைப்பு தொடர்பாக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளோம்.

தமிழகத்தில் பயோ டீசல் என்ற பெயரில் கலப்பட டீசல் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். கலப்பட டீசல் புழக்கம் இருந்தால் அதை தடுக்க துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்