விழுப்புரம் மாவட்டத்தில் 55% பேருக்கு தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரையில் 55 சதவீதம் பேருக்குகரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பக்கவிளைவுகள் ஏதுமில்லை. எனவே பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் ஆட்சியர் மோகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

மாவட்டத்தில் தற்போது நாள்தோறும் 15லிருந்து 20 பேருக்குகரோனா தொற்று கண்டறியப்படுகிறது. இம்மாதத்தில் இதுவரை ஒருவரும் உயிரிழக்கவில்லை. 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும் லேசான காய்ச்சலோடு குணமடைந்து விடுகிறார்கள். ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் 5 அல்லது 6 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.

1,300 இடங்களில் நாளை சிறப்பு தடுப்பூசி முகாம்

“விழுப்புரம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் வெகு சிலருக்கு தொற்று ஏற்பட்டாலும், அவர்களில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. நாளை (அக்.10) கரோனா தடுப்பூசி முகாம் 1,300 இடங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 3,500 பேர் ஈடுபட உள்ளனர்” என்றும் ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் 55 சதவீத பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருவெண்ணைநல்லூர், முகையூர், வானூர் ஒன்றியங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சதவீதம் 45 சதவீதமாக உள்ளது.

1 லட்சம் தடுப்பூசிகள்

விழுப்புரம் நகரில் முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் 98 சதவீதமாகவும், 2 வது டோஸ் போட்டுக்கொண்டவர்கள் 43 சதவீதமாகவும் உள்ளனர். தற்போது கோவாக்ஸின் , கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகளும் 1 லட்சம் இருப்பு உள்ளது. 11 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடவேண்டியுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 65 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா 3 ஆட்டோக்களில் சுகாதாரப் பணியாளர்கள் மூலம்வயதானவர்களுக்கு அவரகளின் வீடுகளுக்கேச் சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏதுமில்லை. எனவே பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றார்.

மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரூ 57 லட்சத்திற்கு மதுபாட்டில்களும், ரூ 24.20 லட்சம் ரொக்கப் பணமும், ரூ 9.23 லட்சம் தங்கம், வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆட்சியர் மோகன் அப்போது தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்