சாலையோர போலி பெட்டிக் கடைகளை அகற்ற ஒரு வாரம் ‘கெடு’ : மதுரை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மதுரையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள போலி பெட்டிக் கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புக் கடைகளை , ஒரு வாரத்துக்குள் அகற்றிக் கொள்ள வேண்டுமென மதுரை மாநகராட்சி ஆணையர் கா.ப. கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் ஆட்சியர், மாநகராட்சி பரிந்துரையில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோருக்கு சாலையோரங்களில் பெட்டிக்கடை வைக்க அனுமதி வழங்கப்படுகிறது.

கடந்த காலத்தில் ஆளும் கட்சியினர் கைகாட்டும் நபர்கள் உள்பட பலருக்கு வரைமுறையின்றி பெட்டிக்கடை வைக்க அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தற்போது சாலையோரங்களில் 5,250 பெட்டிக்கடைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பெட்டிக்கடை வைக்க ரூ. 5 ஆயிரம் டெபாசிட் கட்ட வேண்டும். 8-க்கு 6 அடி அல்லது அதிகபட்சம் 8-க்கு 8 அடி அளவிலேயே கடையை வைக்க வேண்டும். ஆனால், கடைக்கு அனுமதி பெற்று கடையின் முன்பும், பின்னும் உள்ள இடங்களை ஆக்கிரமித்து பெரிய உணவகம், வியாபார நிறுவனங்களை நடத்துகின்றனர்.

இதில் பலர் போலி சான்றிதழ்களை தயாரித்து பெட்டிக்கடை வைத்துள்ளதாகவும், பலர் கடைகளுக்கான அனுமதியை புதுப்பிக்காமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கூறியதாவது: மதுரையில் எவ்வித அனுமதியும் இன்றி ஏராளமான பெட்டிக் கடைகள் செயல்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன.

குறிப்பாக, மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பகுதிகளான சின்னக்கடை தெரு முழுவதும், அவனியாபுரம் பேருந்து நிலையத்திலிருந்து செம்பூரணி வரை மற்றும் அவனியாபுரம் பேருந்து நிலையம், கீழமாரட் வீதி, அரசு ராஜாஜி மருத்துவமனை முன்புறம், சுகுணா ஸ்டோர் ரோடு ஆகிய இடங்களில் பெட்டிக்கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புக் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வகிறது.

இந்தக் கடைகளை ஒருவார காலத்துக்குள் அகற்றாவிட்டால் அபராதம் வசூலிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆணையரின் இந்த அறிவிப்பால் அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்