விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்து - சைக்கிளில் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் சென்ற மதுரை ஆட்சியர் :

By செய்திப்பிரிவு

மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் நேற்று காலை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சைக்கிளில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்குச் சென்று அங்குள்ள குப்பைகளை அகற்றியதோடு முகக் கவசம் அணியாத பயணிகளுக்கு முகக் கவசம் வழங்கினார்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை நேரு இளையோர் மையம் சார்பில் நடந்த மதுரை-ராமேசுவரம் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ஆட்சியர் அனீஸ் சேகர் தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு அங்கிருந்து சைக்கிளில் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் வந்தார்.

அங்கு மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் மற்றும் மாணவர்களுடன் பஸ்நிலைய வளாகத்தில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தினார். பயணிகளிடம் குப்பைகளை கண்ட இடங்களில் போடாதீர், குப்பைத் தொட்டிகளில் கொண்டுசென்று போடுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

பின்னர், பஸ்களில் ஏறி முகக்கவசம் அணியாத பயணிகளிடம் `இன்னும் கரோனா பரவல் முடியவில்லை, முகக்கவசம்தான் ஒரே பாதுகாப்பு' என்று கூறி அவர்களுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகளை வரவழைத்து முகக் கவசங்களை வழங்கி அணிய வைத்தார்.

தொடர்ந்து பஸ்நிலைய வளாகத்தைப் பார்வையிட்டு பயணிகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பற்றி மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்