நடிகர் சூரி உறவினர் இல்ல விழாவில் திருடியவருக்கு ஜாமீன் : உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

நடிகர் சூரி உறவினர் இல்ல விழாவில் நகை திருடிய பரமக்குடி நகைக்கடை உரிமையாளர் விக்னேஷூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதி மன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், ராஜாக்கூரைச் சேர்ந்தவர் நகைச்சுவை நடிகர் சூரி. இவரது சகோதரர் இல்ல விழா, கடந்த மாதம் 9-ம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. அப்போது மணமகள் அறையில் இருந்த 10 பவுன் நகை திருடுபோனது.

இது குறித்து புகாரின்பேரில், கீரைத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த நகைக்கடை நடத்தும் விக்னேஷ் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதி மன்ற மதுரை கிளையில் அவர் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கு நீதிபதி புகழேந்திக்கு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தபோது, விக்னேஷின் தந்தை, தாத்தா ஆகியோர் இனிமேல் இதுபோன்ற குற்றச் செயல்களில் விக்னேஷ் ஈடுபடமாட்டார் என உறுதிமொழிப் பத்திரம் வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, 60 நாள் வரை காலை, மாலையில் மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் அவர் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்