தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில், விருதுநகர் மாவட்டத்தில் 88 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று மாலை அவர் அளித்த பேட்டி:
விருதுநகர் மாவட்டத்தில் நாளை (அக்.10) 5-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 18 வயது பூர்த்தி அடைந்த 15 லட்சம் பேரில் இதுவரை 10 லட்சம் பேருக்கு (64 சதவீதம்) முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
3.5 லட்சம் பேருக்கு (22.5 சதவீதம்) 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு லட்சம் பேரில் 60 ஆயிரம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நாளை 1052 முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக 1.10 லட்சம் தடுப்பூசி வரப் பெற்றுள்ளது. இந்த முகாம் மூலம் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 4 முறை நடந்த மெகா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 2,11,108 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் 80 சதவீதமும், விருதுநகர், திருச்சுழியில் 77 சதவீதம், ராஜபாளையம் 57 சதவீதம், சிவகாசி 55 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இன்னும் 10 நாட்களில் மாவட்டத்தில் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி திறன் ஆய்வில், விருதுநகர் மாவட்டத்தில் 88 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி திறன் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் இதுவரை சுமார் 45 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் மாவட்ட மொத்த மக்கள் தொகையில் 0.002 சதவீதம் மட்டுமே.
மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஒரு பதவி, ஊராட்சி வார்டு உறுப்பினர் 3 பதவிகள், 4 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகள், 17 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு என மொத்தம் 25 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்காக 162 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக அறியப்பட்டுள்ளன. வாக்குப் பதிவில் 725 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago