ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் 300 கடைகள் அடைப்பு : வியாபாரிகள் சங்கத் தேர்தலை நடத்தக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

By செய்திப்பிரிவு

ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் சங்கத் தேர்தலை நடத்த வலியுறுத்தி நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.

ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் என்ற பெயரில் சங்கம் உருவாக்கி அதில் 807 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதாகவும், உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வியாபாரிகளில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே சங்க நிர்வாகிகளுக்கு வீட்டுமனை நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வியாபாரியிடமும் ரூ.70 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு, நிலம் வழங்கப்படாமல் உள்ளதாகவும், அந்த நிலத்தினை வழங்கும் வரை தற்போதைய நிர்வாகிகளே தொடர வேண்டும் என்று ஒரு பிரிவு வியாபாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடும், மோதலும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும், சுங்கக் கட்டணம் வசூலை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகளில் ஒரு பிரிவினர் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப் பட்டிருந்தன.

கடையடைப்பு போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் இருக்கும் வகையில், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸார் மார்க்கெட் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காய்கறி வியாபாரிகள் சங்கத் தேர்தலை நடத்த வலியுறுத்தி, மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வியாபாரிகள் பெருமளவில் வந்திருந்தனர். அவர்களில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்