புதுக்கோட்டை மாவட்டத்தில் 134 ஊராட்சிகளில் 100 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கூறியது: மாவட்டத்தில் 64 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 19 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 11 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளில் 134 ஊராட்சிகளில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 92 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து வரவுள்ள ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகளையொட்டி மக்கள் அதிகம் கூடக்கூடும் என்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்றார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கூறியது: திருச்சி மாவட்டத்தில் 21.86 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள். இதில், இதுவரை 13,28,901 பேருக்கு முதல் தவணையும், 4,64,986 பேருக்கு 2 தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்டத்தில் இதுவரை 61 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் நாளை (அக்.10) 613 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி கூறியது: அரியலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் முதல் வாரம் 47,125 பேருக்கும், 2-வது வாரம் 17,944 பேருக்கும், 3-வது வாரம் 50,941 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாளை (அக் 10) 300 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா கூறியது: பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 240 சிறப்பு முகாம்கள் மூலம் 30 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 2,97,170 (65.9%) நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 89,784 (19.9%) நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago