நெல்லை மாவட்டத்தில் - தசரா வேடப்பொருட்கள் விற்பனை மந்தம் : 2-வது ஆண்டாக வியாபாரிகளுக்கு இழப்பு

திருநெல்வேலியில் கரோனா கட்டுப்பாடுகளால் 2-வது ஆண்டாக தசரா வேடப்பொருட்கள் விற்பனை மிகவும் மந்தமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

மைசூருக்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இவ்வாண்டுக்கான விழா கரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறுகிறது.

அம்மனுக்கு காப்பு கட்டும் வைபவத்துடன் கடந்த 6-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. வரும் 15-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் மகிசாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் பக்தர்கள் பங்கேற்பின்றி கோயில் முன் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேர்த்திக் கடன் செலுத்த வேடமிடும் பக்தர்கள் பலரும் 2-வது ஆண்டாக தற்போதும் வேடமிட்டு காணிக்கைகளை பிரிக்க முன்வரவில்லை. இதனால் தசரா வேடப்பொருட்கள் விற்பனை கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து திருநெல்வேலி டவுனில் தசரா வேடப்பொருட்கள் விற்பனை செய்யும் சொ. ஈஸ்வரன் கூறியதாவது:

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க 2-வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரமும் வழக்கப்படி நடத்தப்படாதது லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் இவ்வாண்டு புதிதாக யாரும் வேடமிடவில்லை. ஏற்கெனவே நேர்த்திக்கடன் செய்தவர்கள் மட்டும் உள்ளூர் அளவில் வேடமிட்டுள்ளனர். அவர்கள் ஏற்கெனவே பயன்படுத்திய வேடப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.

விடுபட்ட சிறிய பொருட்களை மட்டுமே வாங்குகிறார்கள். புதிதாக யாரும் வேடமிட முன்வரவில்லை என்பதால் தசரா பொருட்கள் விற்பனை கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு மிகவும் மந்தமாக இருக்கிறது. மொத்தத்தில் 25 சதவீதம் அளவுக்கே விற்பனை இருக்கிறது. கடந்த ஆண்டு விற்பனை பாதிப்பால் ஏற்பட்ட இழப்பை இவ்வாண்டு தசரா திருவிழாவில் நடைபெறும் விற்பனை ஈடுகட்டும் என்று நம்பியிருந்தோம். ஆனால் 2-வது ஆண்டாக இம்முறையும் விற்பனை மந்தமாகியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, சென்னை, மதுரை மற்றும் உள்ளூரிலிருந்து வாங்கி வைத்திருந்த வேடப்பொருட்கள் விற்பனையாகாமல் இருக்கின்றன என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்