தண்டராம்பட்டு அருகே புளியம்பட்டிக்கு - அரசு பேருந்து இயக்க வேண்டும் : ஆட்சியருக்கு மாணவர்கள் மீண்டும் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தண்டராம்பட்டு அருகே புளியம்பட்டிக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷுக்கு பள்ளி மாணவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த புளியம்பட்டு கிராமத்தில் இருந்து தானிப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும், புதூர் செக்கடி வரை சுமார் 3 கி.மீ., தொலைவு நடந்து சென்று, பின்னர் அங்கிருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்தில் பயணித்து கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது, இரவாகி விடுவதால் மாணவிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதனால், தானிப்பாடியில் இருந்து புதூர் செக்கடி வரை இயக்கப்படும் அரசுப் பேருந்தை, காலை மற்றும் மாலை நேரத்தில் புளியம்பட்டி வரை நீட்டிக்க செய்ய வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷிடம் கடந்த 1-ம் தேதி மாணவிகள் மனு அளித்தனர். அதன்பிறகும் புளியம்பட்டிக்கு அரசுப் பேருந்து இயக்கப்படாதல், பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தொடர்ந்து அவதிப்பட்டனர்.

இதையடுத்து, ஆட்சியரை சந்தித்து மீண்டும் மனு கொடுக்க, ஆட்சியர் அலுவலகத்துக்கு மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் வந்தனர். அப்போது அவர்கள், புளியம்பட்டிக்கு அரசுப் பேருந்து இயக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்தனர். இதையறிந்த தி.மலை மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த மாணவிகளை சந்தித்து மனுவை பெற்றனர். மேலும் அவர்கள், தானிப்பாடியில் இருந்து புதூர் செக்கடி வரை இயக்கப்படும் அரசுப் பேருந்தை புளியம்பட்டி வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இதை யடுத்து மாணவ, மாணவிகள் புறப்பட்டு சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்