முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் - நெல்லையில் 70.36%, தென்காசியில் 73.95% வாக்குகள் பதிவு :

திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 70.36 சதவீதம் வாக்குகளும், தென்காசி மாவட்டத்தில் 73.95 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் 1,69,842 ஆண் வாக்காளர்களில் 1,18,524 பேரும், 1,78,719 பெண் வாக்காளர்களில் 1,26,733பேரும், 51 இதர வாக்காளர்களில் 25 பேரும் வாக்களித்துள்ளனர். மொத்தமுள்ள 3,48,612 வாக்காளர்களில் 2,45,282 பேர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்குப்பதிவு 70.36 சதவீதம் ஆகும்.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 754 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. மொத்தமுள்ள 2,11,420 ஆண் வாக்காளர்களில் 1,53,888 பேரும், 2,22,603 பெண் வாக்காளர்களில் 1,67,060 பேரும், 17 இதர வாக்காளர்களில் 3 பேரும், மொத்தமுள்ள 4,34,040 வாக்காளர்களில் 3,20,951 பேரும் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 73.95. ஆண்கள் வாக்குப்பதிவு சதவீதம் 72.79, பெண்கள் வாக்குப்பதிவு சதவீதம் 75.05.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குப்பெட்டிகள் சீலிடப்பட்டு அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டன. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளுக்கு அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நேற்று காலையில் சீல் வைக்கப்பட்டது. இந்த அறைகளுக்கு முன் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE