நெல்லை, தென்காசி மாவட்டங்களில் - 2-ம் கட்ட தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குச் சாவடிகள் ஒதுக்கீடு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குச் சாவடிகள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2-ம் கட்டமாக களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 6 பதவிகளுக்கு 27 வேட்பாளர்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 60பதவியிடங்களுக்கு 307 பேரும் போட்டியிடுகின்றனர். 89 ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள இடங்களுக்கு 390 பேர் போட்டியிடுகிறார்கள். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 801 பதவியிடங்களுக்கு 172 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கு 1,792 பேர் போட்டியிடுகிறார்கள். வாக்குப்பதிவு 567 மையங்களில் நடைபெறவுள்ளது. மொத்தம் 4,511 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

பணியாளர்கள் எந்த வாக்குச் சாவடிகளில் பணிபுரிய வேண்டும் என்பதற்கான கணினி முறையிலான பணி ஒதுக்கீடு தேசிய தகவலியல் மையத்தின் ஆன்லைன் மென்பொருள் உதவியுடன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, தேசிய தகவலியல் மைய அலுவலர் தேவராஜன், தொழில்நுட்ப இயக்குநர் ஆறுமுகநயினார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சசிகலா, ராம்லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பணியாளர்களுக்கு பணி ஆணைகள் இன்று நடைபெறவுள்ள 3-ம் கட்ட பயிற்சியின்போது வழங்கப்படுகிறது.

தென்காசி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களை சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கும் பணி மாவட்ட தேர்தல் பார்வையாளர் பொ.சங்கர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ முன்னிலையில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கந்தசாமி, குணசேகரன், உமாசங்கர், ராஜமனோகரன், ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம்மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், குருவிகுளம், செங்கோட்டை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 574 வாக்குப்பதிவு மையங் களில் நடைபெறுகிறது. 4,630 பணியாளர்கள் பணியாற்றவுள் ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்