பட்டா இல்லாததால் மின் இணைப்பு பெற முடியவில்லை : திருப்பூர் ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

By செய்திப்பிரிவு

பட்டா இல்லாததால் மின் இணைப்புபெற முடியாததால், 40 ஆண்டுகளாக இருளில் வாழ்ந்து வருவதாக, அவிநாசி வட்டம் குன்னத்தூர் பேரூராட்சி 6-வது வார்டு கல்லக்காபள்ளி பொதுமக்கள், திருப்பூர் ஆட்சியர் சு.வினீத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

குன்னத்தூரில் பிரதான பகுதியில் 40 ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகிறோம். பல ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடி வருகிறோம். இது தொடர்பாக முதல்வர் குறைதீர்க்கும் மையத்துக்கும் மனுக்கள் அனுப்பினோம். அதன்பின்னர், அதிகாரிகள் வந்து சமீபத்தில் இடத்தை ஆய்வு செய்துவிட்டு, பட்டா வழங்கப்படும் என்றனர்.

ஆனால் தற்போது வரைவழங்கவில்லை. பட்டா இல்லாததால், மின் இணைப்பு பெற முடியவில்லை. இரண்டு தலைமுறைகளாக மின் இணைப்பின்றி, கற்காலத்தில் வாழ்வதைப் போல் அவதிப்பட்டு வருகிறோம்.

எங்கள் பகுதியில் சுமார் 50 குழந்தைகள் பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் மாலைநேரங்களில் பாடம் படிக்க மின் வசதி இல்லாமல் கஷ்டப் படுகின்றனர். தெரு விளக்குகளும் இல்லை. எனவே, குழந்தைகளின் எதிர்காலம் கருதி, பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மழை காலங்களில் சேறும், சகதியுமாக எங்கள் பகுதிமாறிவிடுகிறது. கழிவறை உள்ளிட்ட வசதிகளும் இல்லை. அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்