100 நாள் வேலை உறுதி திட்டத்தை விமர்சிப்பதா? : அண்ணாமலை, சீமானுக்கு விருதுநகர் எம்.பி. எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

100 நாள் வேலை உறுதித் திட்டத்தை விமர்சனம் செய்யும் அண்ணாமலை, சீமான் ஆகியோர் விருதுநகருக்கு வந்து அத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதைப் பார்க்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

இது தொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த மாநில அரசின் ஜனநாயக விரோதப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 2007-ம் ஆண்டில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தால் கிராமப்புற மக்களின் சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. ஏழ்மை, வறுமையால் மக்கள் இடம்பெயர்வது தடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்கள் விருதுநகருக்கு வந்து இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.

பட்டாசு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் பட்டாசு தயாரிக்க பேரியம் பயன்படுத்தக் கூடாது என்று 2018-ல் உத்தரவிடப்பட்டது. பின்னர், அந்த உத்தரவு கடந்த மார்ச் 19-ல் நீக்கப்பட்டது. ஆனால் பழைய உத்தரவை மேற்கோள்காட்டி சிபிஐ தரப்பில் தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐ தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.

டெல்லியில் மாசு ஏற்பட காரணமான 26 காரணிகளில் பட்டாசு 26-வது இடத்தில் உள்ளது. அவ்வாறிருக்க பட்டாசுக்கு தடை விதிப்பது ஏற்புடையதாக இல்லை.

பசுமை பட்டாசு தயாரிப்பதில் பெசோ, நீரி அமைப்புகளுக்கு இடையே சரியான புரிதல் இல்லை. இதில் கருத்தொற்றுமை தேவை. சிவகாசி பட்டாசுத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். பட்டாசுக்கு எதிரான கருத்துகளை உடையவர்கள், சிவகாசிக்கு நேரில் வந்து பட்டாசுத் தொழிலையும் தொழிலாளர்களின் நிலையையும் பார்த்தால்தான் அவர்களால் உண்மையை புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்