சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் கொத்தடிமை முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் தேனியில் நடந்தது.
காந்தி பிறந்த நாளான அக்.2-ம் தேதி முதல் நேரு பிறந்த நாளான நவ.14-ம் தேதி வரை நாடு முழுவதும் தேசிய சட்டச் சேவைகள் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இதன்படி தேனியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரப் பேரணி நடைபெற்றது.
தேனி மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.விஜயா கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் மாவட்ட நீதிபதி அ.முகமது ஜியாவுதீன், மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஜெ.வெங்கடேசன். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர் கே.ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பணி இடங்களில் நீண்டநேரம் வேலை செய்யும்படி தொழிலாளர்களை நிர்ப்பந்தப்படுத்துதல், வன்முறைக்கு உட்படுத்துதல், குடும்பத்தினரை பார்க்க அனுமதிக்காதது உள்ளிட்டவை கொத்தடிமை முறையின் கீழ் வரும். இதுபோன்ற நிலை இருந்தால் 1800 4252 650 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஏ.எச்.எம். டிரஸ்ட் நிர்வாகி முகமது இப்ராஹீம், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago