மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீர் ரமேஷ் பாபு இணையதள இணைப்பு வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கரோனா தொற்றால் ரயில்கள் இயக்கம் குறைந்தபோதும், ஊழியர் நலன்கருதி மத்திய அரசு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மதுரை கோட்டத்தில் அரசிதழில் இடம் பெற்ற (Gazetted) அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தவிர, 7,855 ரயில்வே ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட இருக்கிறது. அதிகபட்சமாக ரூ. 17,951 வழங்கப்படும். இன்னும் ஒருவாரத்தில் இந்தத் தொகை வழங்கப்படும். மதுரை கோட்டத்தில் போனஸ் வழங்க ரூ.13.35 கோடி செலவிடப்படுகிறது.
கரோனா தொற்று காரணமாக மாநில அரசு வழிகாட்டுதல்படி பயணிகள் ரயில்கள் இயக்கப்படும்.
தீபாவளியை முன்னிட்டு தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் (எண் 06003) தாம்பரத்தில் இருந்து அக். 13 மற்றும் நவம்பர் 3 ஆகிய நாட்களில் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் விரைவு சிறப்பு ரயில் (எண் 06004) நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 17 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (அக். 7) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago