பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் புனிதமான இடம்தான். எனவே, பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நீதிமன்றங்களை அணுக வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பல்கீஸ் அறிவுறுத்தி உள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டும், சட்டப் பணிகள் ஆணைக்குழு அமைப்பு உருவாகி 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் அக்.2-ம் தேதி முதல் கிராமந்தோறும் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நவ.14-ம் தேதி வரை நடைபெறும் இந்த முகாம்களில் நீதிபதிகள் பங்கேற்று, கிராம மக்களிடம் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றச் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. இவற்றை அனைவரும் சேர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரித்து தீர்ப்பு வழங்க பெரம்பலூர் மாவட்டத்தில் பிரத்யேகமாக போக்ஸோ நீதிமன்றம் இயங்கி வருகிறது.
சிலர் நீதிமன்றங்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் செல்வதை அவமானமாக நினைக்கின்றனர். அப்படி நினைக்கத் தேவையில்லை. நீதிமன்றமும் ஒரு புனிதமான இடம்தான். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் இடமாகவும், அநீதி இழைப்பவர்கள், மோசடி செய்பவர்களை தண்டிக்கும் இடமாகவும் நீதிமன்றங்கள் உள்ளன. அதனால் பொதுமக்கள் தயங்காமல் தங்களின் பிரச்சினைகளுக்காக நீதிமன்றங்கள், காவல் நிலையங்களை அணுகலாம்.
நீதிமன்றத்துக்கு வர இயலாதவர்கள் வீடுகளில் இருந்தே தங்களின் புகார்களை NALSA எனும் செயலி மூலம் பதிவு செய்யலாம். புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இந்த செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவை 04328 296206 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
அப்போது, சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான லதா, மகளிர் நீதிமன்ற நீதிபதி கிரி, ஏடிஎஸ்பி பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago