ஊரக உள்ளாட்சி தேர்தலில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகளை தேர்தல் ஆணையம் கடைபிடிக்க வில்லை என, ராதாபுரம் தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் இன்பதுரை தெரிவித்தார்.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்த அவரை, ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே செல்லவிடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஆட்சியரின் சார்பில் திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகரன் வந்து அந்த மனுவை பெற்றுக்கொண்டார்.
செய்தியாளர்களிடம் இன்ப துரை கூறியதாவது:
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் படவில்லை. ஒவ்வொரு ஒன்றியங்களுக்கும் கூடுதலாக தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படவில்லை. இணைய வசதி இல்லாத இடங்களில் தொடர் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டதாக தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது . ஆனால், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தவில்லை.
எனவே, இது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் ஆகும். தமிழக சட்டப்பேரவை தலைவரின் படங்களை அச்சிட்டு தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகிறது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. ஒரு மாநில அமைச்சரே சட்டப்பேரவை தலைவரின் புகைப்படத்துடன் கூடிய வாகனங்களில் பிரச்சாரம் செய்கிறார். சட்டப்பேரவை தலைவர் படங்களை அகற்றாத தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago