வேலூர், ராணிப்பேட்டை மாவட் டங்களில் முதற்கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று விறு விறுப்பாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் முதற் கட்ட மாக காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு என 4 ஒன்றியங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், 9 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 88 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 154 ஊராட்சி மன்ற தலைவர், 1,302 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 1,553 பதவிகளுக்கு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில், 2 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 10 ஊராட்சி மன்ற தலைவர்கள், 218 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் என மொத்தம் 230 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
காட்பாடி ஒன்றியம் அம்முண்டி கிராம ஊராட்சியில் 1 தலைவர் மற்றும் 9 வார்டு உறுப்பினர் பதவிக்கும், குடியாத்தம் ஒன்றியம் தட்டப்பாறை கிராம ஊராட்சி தலைவர் பதவி என மொத்தம் 11 பதவிகளுக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால், 1,312 பதவிகளுக்கு போட்டி உறுதியானது. இதில், 2,057 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
விறு விறு வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வத் துடன் வாக்களித்துச் சென்றனர். பெரும்பாலான இடங்களில் நண்பகல் 1 மணிக்குப் பிறகு வாக்களிக்க வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நேற்று மஹாளய அமாவாசை தினம் என்பதால் விரதத்தை முடித்த பிறகு நிறைய பேர் வாக்களிக்க வந்தனர். பிற்பகல் 3 மணிக்குப் பிறகு வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மெட்டுக்குளம், கிறிஸ்டியான் பேட்டை வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அதேபோல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கட்டுப் பாட்டு அறையில் இருந்தபடி வெப் கேமராக்கள் மூலம் வாக்குப் பதிவை கண்காணிக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற முதற் கட்ட தேர்தலில் ஆற்காடு, திமிரி மற்றும் வாலாஜா ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 56 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 130 ஊராட்சி மன்ற தலைவர், 987 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 1,179 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. 7 ஊராட்சி மன்ற தலைவர்கள், 171 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 178 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர்.இதனால், 6 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 56 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 123 ஊராட்சி மன்ற தலைவர், 816 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 1,001 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 2,707 பேர் களத்தில் இருந்தனர். மாவட்டத்தில் முதற் கட்ட தேர்தலுக்காக அமைக்கப்பட்ட 653 வாக்குச்சாவடிகளில் 196 பதற்றமானவை என்று கருதி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முதற்கட்ட தேர்தலில் 3 லட்சத்து 404 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி வெப் கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். மேலும், நவ்லாக் ஊராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி, சிப்காட் விஜய் வித்யாலயா மழலையர் தொடக்கப்பள்ளி, ஆற்காடு முப்பதுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு நிலவரம்
வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 6.84%, காலை 11 மணிக்கு 20.41%, நண்பகல் 1 மணிக்கு 36.33%, பகல் 3 மணிக்கு 52.32% வாக்குகள் பதிவாகி இருந்தன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை 9 மணிக்கு 14%, 11 மணிக்கு 18.7%, நண்பகல் 1 மணிக்கு 30.66%, 3 மணிக்கு 49.70% வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப்பதிவு விறு விறுப்பாகவே நடைபெற்றது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago