விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் - 11 ஒன்றியங்களில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக இன்றும், வருகிற 9-ம் தேதியும் நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டத் தேர்தல் இன்று (அக்.6) செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களில் நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை 1,569 ஓட்டுச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.

முதற்கட்ட தேர்தலில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 16 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு 95 பேர், 158 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு 745 பேர், 372 ஊராட்சித் தலைவருக்கு 1,459 பேர், 2,751 ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 8,574 பேர் என 3,297 பதவியிடங்களுக்கு 10 ஆயிரத்து 873 பேர் போட்டியிடுகின்றனர்.

முதற்கட்ட தேர்தலில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 919 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 79 ஆயிரத்து 475 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 65 பேர் என மொத்தம் 7 லட்சத்து 54 ஆயிரத்து 459 பேர் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 15 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

டி.ஐ.ஜி. பாண்டியன் மேற்பார் வையில் எஸ்பி நாதா தலைமையில் வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளான 296 மற்றும்மிகவும் பதட்டமான 62 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் ஒன்றியங்களுக்கு சுற்றுப்பகுதியில் 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று முன் தினம் முதல் மூடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 89 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 217 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 1,608 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 9 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 66 வேட்பாளர்கள் ,89 ஊராட்சி ஒன்றிய வார்டு ஊறுப்பினர் பதவிக்கு 417 வேட்பாளர்கள், 203 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 782 வேட்பாளர்கள், 1,400 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 4,452 வேட்பாளர்கள் ஆக மொத்தம் 1,924 பதவிகளுக்கு 5,717 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இதற்காக 7,751 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதற்கட்ட தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 939 வாக்குச்சாவடி மையங்களில் 2,39,300 ஆண் வாக்காளர்களும், 2,33,183 பெண் வாக்காளர்களும் மற்றும் 85 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 4,72,568 வாக்காளர்கள் வாக்க ளிக்கவுள்ளனர்.

முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் 210 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவகர்லால் மேற்பார்வையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்