வலசக்காடு கிராமத்தில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா? :

முஷ்ணம் அருகே வலசக்காடு கிராமத்தில் சேதமடைந்த பாலத்தை உயர் மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர்.

முஷ்ணம் அருகே வலசக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து பாண்டியன் ஏரியை கடந்து பாளையங்கோட்டை, முஷ்ணம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் வழியாகத்தான் பல்வேறு வாகனங்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் செல்கின்றனர். போதியபராமரிப்பு இல்லாத காரணத்தினாலும், இந்த பாலமானது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

பாலத்தின் ஒரு பகுதி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தும், பாலத்தில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும் உள்ளது. இதனால் இந்த சாலைவழியாக செல்பவர்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இரவு நேரத்தில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவசர கால காரணங்களுக்காக ஆம்புலன்ஸ்,தீயணைப்பு வாகனம் போன்றவை செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் பாலத்துக்கு மேல் தண்ணீர் செல்லும். அப்போது வலசக்காடு, பேரூர் உள்ளிட்ட பகுதி மக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்வதற்கு சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை உள்ளது. பாலத்தை இடித்து அகற்றி விட்டு, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பல முறை உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள். இந்த சாலையில் போக்குவரத்து செல்லும் அளவுக்கு உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்