பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 102 அடியை எட்டிய நிலையில், பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையில் 105 அடி வரை நீரைத் தேக்கி வைக்க முடியும். இருப்பினும், அணையின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, நவம்பர் மாதம் வரை அணையில் 102 அடிவரை மட்டுமே நீரைத் தேக்கி வைக்க வேண்டும். இதனால், கடந்த மாதமே அணையின் நீர் மட்டம் 102 அடியை எட்டிய நிலையில், பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி, காலிங்கராயன் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதாலும், நீர் வரத்து குறைந்ததாலும், அணையின் நீர் மட்டம் 102 அடியில் இருந்து குறைந்ததால், உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று மதியம் அணைக்கு விநாடிக்கு 4634 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இதையடுத்து, அணையில் இருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 2300 கனஅடி நீர் திறக்கப்பட்டது. மாலையில் நீர் வரத்து குறைந்த நிலையில் உபரி நீர் திறப்பு 600 கனஅடியாகக் குறைந்தது. அணையின் நீர் வரத்தைப் பொறுத்து உபரி நீர் திறப்பின் அளவு மாறுபடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படுவதையொட்டி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையின் நீர் மட்டம் நேற்று 102 அடியாகவும், நீர் இருப்பு 30.31 டிஎம்சியாகவும் இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு விநாடிக்கு 2300 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago