சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கோயிலை சேதப்படுத்தி, அவமரியாதை செய்த இளைஞர்களைக் கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் கம்பத்ராயன் கிரி கோயில் அமைந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் இக்கோயிலில் நடக்கும் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானவர்கள் பங்கேற்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள பசுவனாபுரம் பகுதியைச் சேர்ந்த 10 இளைஞர்கள் கம்பத்ராயன் கிரி மலையில் உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர். அங்கு போதைப்பொருட்கள் உபயோகித்ததோடு, கோயிலில் உள்ள வேல் கம்புகளை எடுத்து சேதப்படுத்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதனால் ஆத்திரமடைந்த கடம்பூர் பகுதி பொதுமக்கள் கோயிலை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட இளைஞர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, கடம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்யாததால், கடம்பூர் - சத்தியமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த கடம்பூர் காவல்துறையினர், கோயிலை அவமதித்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago