புதுக்கோட்டை மாவட்டத்தில் கைவிடப்பட்ட - 7 எண்ணெய் கிணறுகள் மூடப்படும் : நிலங்களும் திரும்ப ஒப்படைக்கப்படும் என ஓஎன்ஜிசி அதிகாரிகள் தகவல்

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிபொருள் பரிசோதனைக்காக அமைக்கப்பட்டு, தற்போது கைவிடப்பட்ட 7 எண்ணெய் கிணறுகள் மூடப்படும் என நேற்று நடைபெற்ற ஆய்வுக்குப் பின் ஓஎன்ஜிசி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2017-ல் அறிவிக்கப்பட்ட நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 200 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. அதன் பின், மாவட்டத்தில் எரிபொருள் பரிசோதனைக்காக 7 இடங்களில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மூடி, கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களை உரிய விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக. கிராம சபைக் கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஆழ்துளை கிணறுகள் படிப்படியாக மூடப்படும் என அப்போதைய ஆட்சியர் எஸ்.கணேஷ் உறுதி அளித்து இருந்தார். எனினும், 4 ஆண்டுகளாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், கறம்பக்குடி அருகே வாணக்கன்காட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை அகற்றி, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைப்பதற்காக ஓஎன்ஜிசி பொது மேலாளர் சந்தானகுமார், மண்ணியல் வல்லுநர் அருண்குமார், முதுநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன், முதுநிலை தொழில்நுட்ப வல்லுநர் அழகுமணவாளன், வட்டாட்சியர் சந்திரசேகர் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். கையகப்படுத்தப்பட்ட சுமார் 4.5 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்பு ஏதும் இருக்கிறதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

அதன்பின் ஓஎன்ஜிசி அலுவலர்கள் கூறியது:

வாணக்கன்காட்டில் கடந்த 1994-ல் எரிபொருள் பரிசோதனைக்காக சுமார் 9 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஓஎன்ஜிசி மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அதன்பிறகு, இக்கிணற்றில் இருந்து போதிய எரிபொருள் இல்லாததால் மூடப்பட்டது. எனினும், கடந்த 2017-ல் எண்ணெய் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக சரி செய்யப்பட்டது.

தற்போது வாணக்கன்காடு எண்ணெய் கிணற்றை மேலாய்வு செய்ததில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என தெரிகிறது. இதன்பிறகு, கிணற்றின் மீதான மண் குவியலை அகற்றிவிட்டு ஆய்வு செய்யப்படும். அப்போது, தேவைக்கு ஏற்ப உரிய தொழில் நுட்பங்களைக் கொண்டு சுமார் 600 அடி ஆழத்துக்கு கான்கிரீட் கலவை கொண்டு மூடப்படும்.

தரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தை உடைத்து அகற்றிவிட்டு, விவசாயம் செய்யும் வகையில் விவசாயிகளிடம் நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்.

இதேபோன்று, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிணறுகளுமே கைவிடப்பட்ட நிலையில் உள்ளதால் படிப்படியாக அனைத்து எண்ணெய் கிணறுகளையும் மூடிவிட்டு, உரிய விவசாயிகளிடம் நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்