திருச்சி மாநகரில் தொடர்ந்து பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருச்சி மாநகரில் கடந்தாண்டில் 150-க்கும் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. கரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் நேரிட்டாலும், டெங்கு காய்ச்சலால் மாநகரில் உயிரிழப்பு நேரிடவில்லை. ஆனால், நிகழாண்டில் இதுவரை 220-க்கும் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நிகழ் மாதத்தில் கடந்த 5 நாட்களில் இதுவரை 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 29, 38, 39, 44, 45, 52 ஆகிய வார்டுகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க மாநகராட்சி நகர் நல அலுவலகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக திருச்சி மாநகர குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சக்திவேல் கூறியது:
நிகழாண்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி அலுவலர்கள் சுணக்கம் காட்டி வருகின்றனர். தற்போது மழை பெய்து வரும் நிலையில், டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களைக் கண்டறிந்து அழிக்கும் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்களை பார்க்க முடியவில்லை. எனவே, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் கூறியது: மாநகரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் வழக்கம்போல நடைபெற்று வருகின்றன. தேவைப்பட்டால் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே உரிய தீர்வு கிடைக்கும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago