நெல்லை, தென்காசியில் இன்று முதல்கட்ட தேர்தல் : காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்களிக்கலாம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிகளுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை மற்றும் பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 3,48,042 வாக்காளர்கள் வாக் களிக்க உள்ளனர். மொத்தம் உள்ள 1,113 பதவிகளில், 211 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 902 பதவிகளுக்கு 3,006 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 621 வாக்குச்சாவடிகளில், பதற்றமானவையாக கண்டறியப் பட்டுள்ள 182 சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 5,035 அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள். இத்தேர்தலை 10 பறக்கும்படை குழுவினர் கண்காணிக்கிறார்கள். 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

செய்தியாளர்களிடம் ஆட்சியர் வே.விஷ்ணு கூறியதாவது:

தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 98 புகார்கள் வரப்பெற்று, அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை மானூர் வட்டாரத்தில் ரூ.4.7 லட்சம், நாங்குநேரி வட்டாரத்தில் ரூ.40 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளது. காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்கலாம். மாலை 5 மணி முதல் மாலை 6 மணிவரை கரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம். வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார். தூத்துக்குடி பயிற்சி ஆட்சியர் ஸ்ருதயஞ்ஜெய் நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராம்லால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத் தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இன்றும், வரும் 9-ம் தேதியும், தேர்தல் ஆயத்தப் பணிக்காக வரும் 8-ம் தேதியும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. நாளை (7-ம் தேதி) பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் முதற்கட்டமாக ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீ லிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங் களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறு கிறது. 5 ஒன்றியங் களில் மொத்தம் உள்ள 1,266 பதவியிடங்களில் 207 பேர் பேட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள பதவிகளுக்கு 3,534 பேர் போட்டி யிடுகின்றனர்.

சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். 57 வாக்குச்சாவடி கள் வெப் கேமராக்கள் மூலமும், 697 வாக்குச்சாவடிகளில் சிசிடிசி கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்படுகிறது. 50 நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்