சேலம் அரசு மருத்துவமனையில் - துரித சிகிச்சையால் பக்கவாதத்தால் கை, கால் நிரந்தர செயலிழப்பு தவிர்ப்பு :

சேலம் அரசு மருத்துவமனையில் துரித சிகிச்சை அளிக்கப்பட்டதால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் கை, கால்கள் நிரந்தர செயலிழப்பு தவிர்க்கப்பட்டது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 2-ம் தேதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 59 வயதுடைய அரசு ஊழியர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பக்கவாதம் காரணமாக அவரது இடது கை, கால் செயலிழந்து இருந்தது.

மருத்துவமனையில் மருத்துவர்கள், அவரது தலையை உடனடியாக ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, அவருக்கு மூளை நரம்பில் ஏற்பட்டுள்ள ரத்தக் குழாய் அடைப்பை நீக்க ஆர்பிடிஏ. என்ற விலை உயர்ந்த மருந்தை செலுத்தினர்.

இச்சிகிச்சை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 2 மணி நேரத்துக்குள் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது மூளை நரம்பில் ஏற்பட்டிருந்த அடைப்பு நீங்கி அவரது கை, கால் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறும்போது, “பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனை வந்தால் கை, கால்களில் நிரந்தர பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இச்சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.1 லட்சம் வரை செலவாகும். இச்சிகிச்சையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றனர்.

இதனிடையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உரிய நேரத்தில் துரிதமான சிகிச்சை அளித்த மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் செல்வராஜ், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் பால பிரதீப், லோகேஷ் ஆகியோரை மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால், நரம்பியல் துறை தலைவர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்