விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் - 2,508 வாக்குச்சாவடிகளில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு : 5,221 பதவிகளுக்கு 16,590 பேர் போட்டி

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப் பதிவில் 4 ஒன்றியங்களில் 4,72,568 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 7, 54, 459 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளையும், வரும் 9-ம் தேதியும் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருகட்டங்களாக 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 180 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 412 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 1,889 வாக்குச்சாவடி மையங்களில் 4,83,841 ஆண் வாக்காளர்கள், 4,77,887 பெண் வாக்காளர்கள், 186 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 9,61,914 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இதில் முதற்கட்டமாக நாளை (அக்.6) திருக்கோவிலூர், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 10 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 89 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 217 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 1,608 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 9 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 66 வேட்பாளர்களும் ,89 ஊராட்சி ஒன்றிய வார்டு ஊறுப்பினர் பதவிக்கு 417 வேட்பாளர்களும், 203 ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு 782 வேட்பாளர்களும், 1,400 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 4,452 வேட்பாளர்களும் ஆக மொத்தம் 1,924 பதவிகளுக்கு 5,717 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இதற்காக 7,751 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 939 வாக்குச்சாவடி மையங்களில் 2,39,300 ஆண் வாக்காளர்களும், 2,33,183 பெண் வாக்காளர்களும் மற்றும் 85 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 4,72,568 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

அதேபோன்று அக்டோபர் 9--ம் தேதி 2-ம் கட்டமாக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் மற்றும் கல்வராயன்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 9 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 91 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 195 ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் 1,554 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 950 வாக்குச்சாவடி மையங்களில் 2,44,541 ஆண் வாக்காளர்களும், 2,44,704 பெண் வாக்காளர்களும் மற்றும் 101 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 4,89,346 வாக்காளர்கள் வாக்களிக் கவுள்ளனர்.இதற்காக 7,773 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்காக மாவட்டத்தில் 21 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 549 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 10,384 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் என்ற விகிதத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களிலும், 9 வாக்கு எண்ணிக்கை மையங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 180 பகுதிகளில் உள்ள 390 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பும் 134 தேர்தல் நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 688 ஊராட்சிமன்றத் தலைவர்கள், 5,088 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 6,097 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இதில் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (6-ம் தேதி) முதற்கட்டமாக கண்டமங்கலம், விக்கிரவாண்டி, திருவெண்ணைநல்லூர், செஞ்சி, முகையூர், ஒலக்கூர், வானூர் ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 16 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 95 பேரும், 158 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 745 பேரும், 372 ஊராட்சிமன்றத் தலைவர் பதவிகளுக்கு 1,459 பேரும், 2,751 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 8,574 பேரும் என மொத்தம் 3,297 பதவிகளுக்கு 10,873 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 1,569 வாக்குச்சாவடி மையங்களில் 7, 54, 459 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 13,074 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.இன்று முதல் மக்களை சந்தித்து யாரும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாதென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் எஸ்பி நாதா தலைமையில் 2 ஆயிரம் போலீஸார் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதே போல் வரும் 9-ம் தேதி 2-வது கட்டமாக வல்லம், கோலியனூர், காணை,மேல்மலையனூர், மரக்காணம், மயிலம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. வரும் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்