திருச்சி விமானநிலையத்தின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக சுற்றுச்சுவர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புக் குழு தலைவரும், மாநகர காவல் ஆணையருமான க.கார்த்திகேயன் தெரிவித்தார்.
திருச்சி சர்வதேச விமானநிலைய பாதுகாப்புக் குழுக் கூட்டம் விமானநிலைய பழைய முனைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விமானநிலைய பாதுகாப்புக் குழுவின் தலைவரும், மாநகர காவல் ஆணையருமான க.கார்த்திகேயன் தலைமை வகித்தார். விமானநிலைய இயக்குநர் எஸ்.தர்மராஜ் முன்னிலை வகித்தார். இதில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களான மாநகர, மாவட்ட காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, இந்திய விமானப்படை, குடியேற்றப்பிரிவு, சுங்கத்துறை, உளவுத்துறை, தீயணைப்புத்துறை, மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் விமானநிலைய பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படைத் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் குறித்தும், தேசிய பாதுகாப்புக் குழுவினருடன் இணைந்து விமான கடத்தல் மற்றும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகை மேற்கொள்வது குறித்தும், கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், விமானநிலைய விரிவாக்கப் பணிக்கு இடையூறாக இருக்கும் அம்பேத்கர் நகரிலுள்ள குடியிருப்பு பகுதிகளை அப்புறப்படுத்தவும், அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில் மாற்று ஏற்பாடுகளை செய்து தருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதுதவிர, விமானநிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மாநகர காவல்துறை சார்பில் ரோந்து பணிகளை மேற்கொள்வது குறித்தும், விமானநிலையத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் புதிய ஆட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என போலீஸார் மூலம் சோதனை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டம் குறித்து மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் கூறும்போது, ‘‘கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பாதுகாப்புக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதன்படி, விமானநிலைய வளாகம் மற்றும் வெளிப்பகுதிகளில் தற்போது 16 இடங்களில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமானநிலையத்தின் சுற்றுச்சுவர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால், பாதுகாப்பு கருதி விமானநிலைய சுற்றுச் சுவர்களில் இரவு நேரத்திலும் காட்சிகள் தெளிவாக பதிவாகக்கூடிய வகையிலான சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago