திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் நேரில் பங்கேற்ற குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனால், நேற்று மனு அளிக்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக பெட்டி மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் மனுக்கள் பெறப்பட்டு வந்தன.
இதனிடையே, அரசு அனுமதி அளித்ததையடுத்து, 7 மாதங்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நேற்று மீண்டும் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதன்படி, திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக நேற்று பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
வழக்கமாக ஆட்சியர் அலுவலக கூட்டரங்குக்கு வெளியே பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதித் தரும் பணியை மேற்கொண்டு வந்த தன்னார்வ அமைப்பினர் யாரும் நேற்று வராததால் கிராம மக்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து தன்னார்வலர் அமைப்பைச் சேர்ந்த பால் குணாவிடம் கேட்டபோது, “ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று, அடுத்த கூட்டத்தில் இருந்து பணியை மேற்கொள்ள உள்ளோம்’’ என்றார்.
இதேபோல, அரியலூரில் ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 363 மனுக்களும், கரூரில் ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 435 மனுக்களும், புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 340 மனுக்களும், நாகையில் ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 154மனுக்களும், மயிலாடுதுறையில் ஆட்சியர் ரா.லலிதா தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் 72 மனுக்களும் பெறப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago