தென் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் - முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா 2-வது அலைகட்டுக்குள் வந்துள்ளதாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாலும் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

கல்லூரிகளில் ஏற்கெனவே 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில் முதலாமாண்டு மாணவ,மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நேற்று தொடங்கியது. கல்லூரிகளுக்கு வந்த முதலாமாண்டு மாணவ, மாணவியரை சீனியர் மாணவர்கள் வரவேற்றனர். முதலாமாண்டு மாணவ, மாணவியர் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் என்பதால் இவர்கள் தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்பில்லை. எனவே,சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதல்படி முதல் 3 நாட்களுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்தும் வகையிலான வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்துகிறார்கள். நடப்பு கல்வியாண்டில் கூடுதலாக 25 சதவீதம் மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி அளித்திருந்ததால் கடந்த கல்வியாண்டை விட கூடுதல் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இடவசதி குறைவாக இருக்கும் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஷிப்டு முறையில் வகுப்புகளை நடத்த சில கல்லூரி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. மாணவ, மாணவியர் முகக்கவசம் அணிந்து வந்த நிலையில்,தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே வகுப்புக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்