காந்தி ஜெயந்தி தினத்தில் விடுமுறை அளிக்காத - 186 நிறுவனங்கள் மீது நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் காந்தி ஜெயந்தி தினத்தில் விடுமுறை அளிக்காத 186 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட 204 இடங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா அல்லது தொழிலாளர்கள் பணிபுரிய முன் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத மற்றும் முன் அறிவிப்பு அளிக்காத 153 நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆர்.மலர்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தேசிய விடுமுறை தொடர்பாக தொழிலாளர் துறை சார்பில் திருப்பூர் மாநகரம், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 33 நிறுவனங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு, உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்