கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில், ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 901 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிர்ணயித்த இலக்கை விட குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் நான்காவது முறையாக மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, ஊரக பகுதிகள் என மொத்தம் 558 மையங்களில், சுமார் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதுதொடர்பாக, சுகாதாரத்துறையினர் கூறும்போது, “கோவையில் நேற்று ஒரே நாளில் 31,871 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, 49,583 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என மொத்தம் 81,454 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது” என்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 672 முகாம்கள் மூலம் 81,120 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நேற்று 80,066 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மருத்துவத் துறை மற்றும் தன்னார்வலர்கள் என 2,688 பேர் இப்பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், உடுமலை வட்டம் குடிமங்கலம் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, அனுப்பர்பாளையம் புதூர் மாநகராட்சி பள்ளி, புதிய பேருந்து நிலையம், பாண்டியன் நகர், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டத்தில் 292 முகாம்களில் 22 ஆயிரத்து 381 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 4080 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 18 ஆயிரத்து 301 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
உதகையில் உள்ள ரெக்ஸ் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago