பவானி அருகே தனியார் மஞ்சள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆயிரக்கணக்கான மூட்டை மஞ்சள் எரிந்து சேதமானது.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த தயிர்பாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான மஞ்சள் கிடங்கு உள்ளது. இங்குள்ள நான்கு கிடங்குகளில் ஆயிரக்கணக்கான மூட்டை மஞ்சள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்தது.
நள்ளிரவில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், மஞ்சள் கிடங்கில் இடி மின்னல் தாக்கியதில் மஞ்சள் மூட்டைகளில் தீ பற்றியது. கிடங்கில் இருந்து புகை வெளியேறிய நிலையில், பவானி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பவானி தீயணைப்புத்துறையினருடன், ஈரோடு, கோபி, பெருந்துறை தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் வெங்கடாசலம், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் காந்தி, நவீந்திரன், ஆறுமுகம், முத்துசாமி ஆகியோருடன் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நான்கு கிடங்குகளில் மூன்று கிடங்குகளில் இருந்த மஞ்சள் மூட்டைகள் தீக்கிரையான நிலையில், ஏராளமான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. நேற்று மதியம் வரை தீயணைப்பு அலுவலர்கள் போராடி, தீயை அணைத்தனர். இதில் ஒரு கிடங்கில் இருந்த மஞ்சள் மட்டும் தப்பியது.
இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறும்போது, ‘இடி, மின்னல் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சேதத்தின் மதிப்பு குறித்து இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இடி,மின்னலுடன் கன மழை பெய்யும்போது, மரத்தின் கீழ் பொதுமக்கள் ஒதுங்கக் கூடாது. இடி, மின்னலால் வாகனத்தில் செல்வோருக்கு பாதிப்பு ஏற்படாது. இடி, மின்னல் மற்றும் மழை வெள்ளத்தால் பேரிடர் ஏற்பட்டால் தீயணைப்புத்துறையின் உதவியை பொதுமக்கள் நாடலாம், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago