சூழலியலுக்கு அச்சுறுத்தல் - பராமரிப்பு இல்லாததால் வீணாகிப் போன பாகூர் ஏரி :

By அ.முன்னடியான்

போதிய பராமரிப்பு இல்லாததால் பாகூர் ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதோடு, சூழலியலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

புதுச்சேரியின் தெற்கே சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது பாகூர் ஏரி. மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஏரியான இது, புதுச்சேரியின் நெற்களஞ்சியமாக விளங்கும் பாகூரின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 1,740 ஹெக்டேர். இதில் புதுச்சேரியில் 1,664 ஹெக்டேரும், தமிழகத்தில் 76 ஹெக்டேரும் உள்ளடக்கியுள்ளது.

3.60 மீட்டர் ஆழமுள்ள இந்த ஏரியில் 193.50 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் ஏரியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4,300 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.

இதுமட்டுமின்றி ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகளும் வந்து தங்கிச் செல்வதால் சிறந்த சூழலியல் தலமா கவும் விளங்குகிறது. ஏரி வறண்டிருந்த காலங்களில் அங்கு சினிமா படப்பிடிப்புகளும் நடந்துள்ளது.

இந்த ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப் படாமல் உள்ளதால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் தூர்ந்துபோய் ஏரியின் ஆழம் குறைந்துள்ளது. அதேநேரத்தில் ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. இதனிடையே, சில நபர்கள் ஏரியை உழுது பயிர் செய்து வருவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த பிரச்சினைகள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது பாகூர் ஏரி போதிய பராமரிப்பு இல்லாததால் அதன் கரைகள் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. கரைகள் பலகீனமாக காட்சியளிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகூர் ஏரியின் அடையாளமாக விளங்கி வந்த நீர் அளவீடு கோபுரம் இடிந்து விழுந்து அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் ஏரியின் அழகு பொலி விழந்துள்ளது.

இதுதொடர்பாக விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், ‘‘1970-ல்பாகூர் ஏரியின் மொத்த பரப்பளவு 1,740 ஹெக்டேர் இருந்தது. அது இப்போது ஆக்கிரமிப்பினால் சுருங்கியுள்ளது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் ஏரியின் ஆழம் வெறும் 0.10 மீட்டர் தான் உள்ளது.

ஏரியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதனை மீறி தண்ணீரை மடைமாற்றம் செய்து தற்போது மீன்பிடிப்பது நடந்து கொண்டிருக்கிறது. பாகூர் ஏரியின் வடக்கு பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பயிரிடப்படுகிறது. இதனால் பாகூர் ஏரி முழுவதும் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் சென்றுவிடும் அபாயம் உள்ளது.

ஏரிக் கரைகளில் இருந்த பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், ஏரி பொலிவிழந்துள்ளது. மதுப்பிரியர்கள் மதுகுடித்துவிட்டு பாட்டில்களை ஏரியில் வீசிச் செல்வதும் நடக்கிறது.

இதனால் பொதுமக்கள் ஏரிக்கு செல்ல தயங்குகின்றனர். ஏரியின் அழகும் கலையிழந்து வருகிறது. இவற்றையெல்லாம் தடுப்பதோடு, ஏரி மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரி அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். ஏரியை சுற்றி கம்பிவேலி அமைக்க வேண்டும். இவ்வாறு பராமரித்தால் புதுச்சேரி சுற்றுச்சூழலியலில் சிறந்த இடத்தை பாகூர் ஏரி வகிக்கும்’’ என்று குறிப்பிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்