ஈரோடு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் மாலை தொடங்கிய மழை, இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது. ஈரோடு நகரில் தொடர் மழையால், தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் பல இடங்களில் மழைவெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
பாதாளச்சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள், சேறும் சகதியுமாக மாறியதால், இரு சக்கர வாகனத்தில் வந்த பலர் விபத்தில் சிக்கினர். இடி, மின்னல் பாதிப்பால் பல இடங்களில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் மின்சாதனப் பொருட்கள் பழுதடைந்தன.
ஈரோடு சென்னிமலை சாலையில் பலத்த மழையால் வெள்ள நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வ.உ.சி.பூங்கா மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறிச்சந்தை வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. மாவட்ட அளவில் சத்தியமங்கலத்தில் அதிகபட்சமாக 53 மி.மீ. மழை பதிவானது.
மூதாட்டி உயிரிழப்பு
ஈரோடு மரப்பாலம் நேதாஜி வீதியைச் சேர்ந்த ராஜம்மாள் (70), ஓட்டு வீட்டில் தனது மகன் ராமசாமியுடன் இரவில் தூங்கியுள்ளார். தொடர்மழையால் வீட்டின் மண் சுவர்கள் பலவீனமடைந்து, ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில், ராஜம்மாள் உடல் நசுங்கி உயிரிழந்தார். ராமசாமிக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன் தினம் பெய்த மழையளவு விவரம் (மி.மீ): சத்தியமங்கலம் 53, பவானிசாகர் 38.6, எலந்தகுட்டைமேடு 38.2, கோபி 35.2, குண்டேரிபள்ளம் 34.2, ஈரோடு 34, கொடிவேரி 31.2, நம்பியூர் 29, கொடுமுடி 27.4, பவானி 27, பெருந்துறை 17, அம்மாபேட்டை 16, வரட்டுப்பள்ளம் 16, கவுந்தப்பாடி 12, மொடக்குறிச்சி 11, சென்னிமலை 4.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago