நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் திரள வேண்டும் : இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டில் எம்.பி-க்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் திரள வேண்டும் என திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய மாணவர் சங்கம் சார்பில், நீட் எதிர்ப்பு மாநில மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், மாவட்டச் செயலாளர் ஜி.கே.மோகன், துணைச் செயலாளர் ஜே.சூர்யா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில், திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசியது:

நீட் தேர்வு விலக்கு என்பது நாடு தழுவிய போராட்டமாக மாற வேண்டும். ஏனெனில், தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளதாக டெல்லியில் கருதுகின்றனர். எனவே, நாடு முழுவதும் உள்ள இந்திய மாணவர் சங்கம், நாடு முழுவதும் உள்ள மாணவர் அமைப்புகளைத் திரட்டி, நீட் தேர்வில் உள்ள ஆபத்துகளை விளக்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் திரள வேண்டும்.

நீட் தேர்வில் விலக்கு பெறுவ தற்கு, ஜல்லிக்கட்டை மீட்டது போல பெரிய அளவில் போராட்டம் நடத்தினால் மட்டுமே சாத்தியப் படும். அதை மாணவர்கள் மன்றம் நிரூபித்தாக வேண்டிய நிலை உள்ளது. நீட் தேர்வைபோல, நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிராகவும் மாணவர்கள் போராட வேண்டும் என்றார்.

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசியது: நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான உரிமையும், திறனும், திராணியும் தமிழ்நாட் டுக்கு உண்டு. நீட் தேர்வில் இருந்து மத்திய அரசு பின்வாங்கும் வரை தமிழ்ச் சமூகம் போராட்டத்தைக் கைவிடாது என்று மாணவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றார்.

பொதுப் பள்ளிக்கான மாணவர் மேடை அமைப்பின் தலைவரும், கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசும்போது, “நீட் என்பது மருத்துவ மாணவர் சேர்க்கையுடன் நிற்காமல், மற்ற அறிவியல் படிப்பில் சேர நினைக் கும் மாணவர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்றார்.

மேலும், தமுஎகச மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி உள்ளிட்டோர் பேசினர்.

மாநாட்டில், நீட் தேர்வில் விலக்கு கோரும் தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். கல்வியை மாநி லப் பட்டியலுக்கு மாற்ற வேண் டும். நீட், நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்