உலக வரலாற்றுச் சின்னங்கள் வரிசை யில் சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம் இடம்பெறும் என தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
திருச்சி சிறுகனூரில் பெரியாருக்கு 95 அடி உயர சிலை, 40 அடி உயர பீடம் உருவாக்கி, அதனருகில் அறிவியல், பெரியார் மற்றும் சமூகநீதி, சாதி ஒழிப்பு உள்ளிட்டவை அடங்கிய காணொலி காட்சியரங்கம், புத்தக அரங்கங்கள் உள்ளிட்டவற்றுடன் பெரியார் உலகம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா டிச.24-ம் தேதி நடைபெறும். பெரியாரின் 150-வது பிறந்த நாளுக்குள் பெரியார் உலகத்தின் பெரும் பணிகள் முடிந்து நடைமுறைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன.
உலக வரலாற்றுச் சின்னங்கள் வரிசையில் சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம் இடம்பெறும். பஞ்சாபில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதல்வராகும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அங்கு நடைபெறும் போராட்டங்கள் பதவிக் கான சண்டை மட்டுமல்ல, சமூகநீதிக் கான வாய்ப்பு கிடைக்குமா என்று அழுத்தப்பட்டுக் கொண்டி ருந்தவர்களின் உரிமைப் போராட்டமும் தான். காங்கிரசின் தலைமை சரியான நபரை அடையாளம் கண்டு வாய்ப்பு கொடுத்துள்ளது. அதைப் பொறுக்காத பாஜக ‘சித்து’ விளையாடிக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு மற்றும் வேறு சில மாநிலங்களில் செய்த வரலாற்றை பஞ்சாபிலும் செய்ய முடியுமா என முயற்சிக்கின்றனர். பஞ்சாபியர்கள் ஏமாறமாட்டார்கள் என்றார்.
முன்னதாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய கற்போம் பெரியாரியம், திராவிடம் வெல்லும், மத்திய பாஜக ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி என்பன உட்பட 4 நூல்கள் வெளியீட்டு விழா, திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் மலர்மன்னன் வரவேற்றார். பெரியார் வீர விளையாட்டுக் கழக தலைவர் பேராசிரியர் சுப்ரமணியம், பெரியார் உயராய்வு மைய இயக்குநர் பேராசிரியர் சீனிவாசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா உள்ளிட்டோர் பேசினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago