ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் - இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு : நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறு வதை முன்னிட்டு இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதை யொட்டி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றி யங்களில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வேட்பாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, தென்காசி, செங்கல் பட்டு, காஞ்சிபுரம் என 9 மாவட் டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (6-ம் தேதி) 2-ம் கட்ட தேர்தல் 9-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. 23-ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. 25-ம் தேதி மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு, அன்றிரவு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப் பட்டன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, பேரணாம்பட்டு ஆகிய 4 ஒன்றியங்களுக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை ஆகிய 4 ஒன்றியங்களுக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, வாலாஜா ஆகிய ஒன்றியங்களுக்கு முதற் கட்டமாக நாளை மறுநாள் 6-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அதேபோல, 2-ம் கட்ட தேர்தல் வரும் 9-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, கணியம்பாடி மற்றும் வேலூர் ஒன்றியங்களுக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர், ஆலங் காயம் ஆகிய 2 ஒன்றியங்களுக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர் ஆகிய 4 ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குசீட்டு அடிப்படை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 4 விதமான வாக்குகளை வாக் காளர்கள் செலுத்தவுள்ளனர். அதாவது, கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் என 4 வகையான வாக்குகளை வாக் காளர்கள் செலுத்த வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சீட்டு அச் சிடும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள பொருட்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் முதல் நாளில் இந்த பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தியும், அரசின் 11 வகையான அடையாள அட்டைகளான ஆதார் அட்டை, அஞ்சல கணக்கு புத்தகம், புகைப் படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது வாக்கு களை செலுத்தலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித் துள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங் களுக்கு நாளை மறுநாள் முதற் கட்ட தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது. இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற உள்ளதால் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டி யிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதற்கட்ட தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தலைமை வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி மைய அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முதற்கட்ட தேர்தலை முன்னிட்டு 11 ஊராட்சி ஒன்றி யங்களுக்கு வரும் 6-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்