கடந்த ஆண்டு தீர்மானம் குறித்த கேள்வியால் - கோக்கலை ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் ரத்து :

திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோக்கலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா உள்பட அரசுத் துறை அதிகாரிகள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில், குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேலும், கடந்த 2020-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஒரு பகுதியாக கோக்கலை கிராமத்தில் இயங்கும் கல் குவாரிகளை தடை செய்வது என முடிவு செய்யப்பட்டது. எனினும், இத்தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுப்பப்பட்டது.

இதற்கு, அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. இதுபோல் பல்வேறு புகார்களை கூட்டத்தில் பங்கேற்றோர் எழுப்பினர். மேலும், பழைய தீர்மானங்களுக்கு நடவடிக்கை எடுத்த பின்னர் மற்றவை குறித்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கிராமசபைக் கூட்டத்தில் எவ்வித தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. கூட்டத்தையும் ரத்து செய்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் அறிவித்தார். இதனால் கிராம சபைக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE