திருச்செங்கோட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை யொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:
திருச்செங்கோடு, பள்ளிபாளையம் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கால்வாய் தூர்வாரும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். நீரோடைகள், பாசனக் கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் மழைநீர் வெளியேறும் கால்வாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். செய்து முடிக்காத பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
நீர் நிலைகளில் மழைநீர் நிரம்பும்போது கரைகள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாலையில் மழைநீர் அதிக அளவில் கடக்கும் பகுதிகளின் விவரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து இரவு நேரங்களில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கண்காணித்து தேவைப்படும் இடங்களில் தடுப்புகளை அமைத்து எச்சரிக்கை செய்ய வேண்டும்.
மின்வாரிய அலுவலர்கள் தங்கள் பகுதியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு மின்கம்பிகள் ஏதேனும் அறுந்து விழுந்தால் உடனடியாக மின்சாரத்தை தடைசெய்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குடிநீர் பாத்திரங்களை மூடி பயன்படுத்த வேண்டும். தண்ணீரை திறந்து நிலையில் வைத்திருக்கக் கூடாது. மாணவர்கள் டெங்கு கொசு குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த சூரியம்பாளையத்தைச் சேர்ந்த நபர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் 10 கிலோ அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி, சேலை மற்றும் தற்காலிக நிவாரணத்தொகை தலா ரூ.1,000 உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் தே.இளவரசி, காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago