சிதம்பரத்தில் காந்தியடிகள் சிலையிடம் ஓய்வூதியர் நலச்சங்க கூட்டமைப்பினர் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டி மனு அளித்தனர்.
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே காந்தியடிகள் சிலை உள்ளது. நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர், காந்தி மன்றத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் தமிழ்நாடு இபிஎஸ் ஓய்வூதிய நலச் சங்ககூட்டமைப்பை சேர்ந்த கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வேணு கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் காந்தியடிகள் சிலையின் பாதத்தில் ஒரு மனுவை வைத்தனர்.
அந்த மனுவில், "நாங்கள் வறுமையில் வாடி வருகிறோம். தமிழ்நாடு இபிஎஸ்-95 ஒய்வூதியம் பெறும் அனைவருக்கும் குறைந்தபட்சம் மாதம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் பஞ்சபடியை உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தப்பட்ட ஆண்டு நிவாரண தொகை வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு இபிஎஸ் ஓய்வூதிய நலச் சங்க கூட்டமைப்பை சேர்ந்த கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வேணுகோபால் கூறுகையில், "ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி பதனிடும் ஆலையில் பணிபுரிந்த எங்களுக்கு சரியான ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து பலமுறை அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
நாங்கள் மிகவும் சிரமத்துடன் வறுமையில் வாழ்ந்து வருகிறோம். காந்தி ஜெயந்தியன்று அவரது சிலையின் பாதத்தில் எங்களது கோரிக்கையை மனுவை வைத் துள்ளோம். அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவே இதுபோன்று செய்தோம்"என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago