சர்வதேச பூஞ்சைகள் தினத்தை முன்னிட்டு சேலம் பெரியார் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை சார்பில் பூஞ்சைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. நுண்ணுயிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஆர்.பாலகுருநாதன் வரவேற்றார். கருத்தரங்கை துணைவேந்தர் ரா.ஜெகநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:
பூஞ்சைகள் பொருளாதார ரீதியிலும், மருத்துவ ரீதியிலும் பல பயன்களைக் கொண்டதாக உள்ளன. முதல்முதலில் கண்டுபிடித்த பெனிசிலின் நோய் எதிர்ப்பு மருந்தில் இருந்து இதனுடைய பயன் உலகுக்கு தெரிய வந்தது. அதன் பிறகு காளான்கள் ஊட்டச்சத்து நிறைந்த பூஞ்சைகளாக கருதப்பட்டன. மேலும், பூஞ்சைகள் விவசாயிகளின் உற்ற தோழனாக திகழ்கின்றன. பயிர்கள் மீதான நோய்த் தாக்குதலை பூஞ்சைகள் தடுக்கின்றன.
பறவைகள் முழுமையாக நீங்கினால் கூட வனப்பகுதி பிழைத்துக் கொள்ளும். ஆனால், பூஞ்சைகள் இல்லாமல் வனங்கள் நீடிக்கவே முடியாது. ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூஞ்சைகள்தான் முதல்முதலில் தோன்றிய உயிரிகளாக கருதப்படுகின்றன. பூஞ்சைகள் வாழ்க்கைக்கும், இறப்புக்கும் இடையிலான மிகச் சிறப்பான உயிரியாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பி.வி.தனபால் பேசியதாவது, கரோனா முதல் மற்றும் 2-வது அலையில் சேலம் அரசு மருத்துவமனையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. 2-வது அலையில் ஆக்சிஜன் படுக்கைகள் ஒரு சவாலாக இருந்த நிலையில், கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று மிகப் பெரிய சவாலாக மாறி விட்டது. 8 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில், கருப்பு பூஞ்சை நோய்க்காக சிகிச்சை அளிக்கப்பட்டது.
பூஞ்சைகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் இதனைத் தவிர்க்க முடியும். கரோனா வராதவர்களுக்கு கூட கருப்பு பூஞ்சை நோய் வந்ததற்கு முக்கிய காரணம் முகக்கவசத்தை சரியான முறையில் பராமரித்து அணியாதது தான், என்றார்.
நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் ஏ.முருகன் நன்றி கூறினார். பூஞ்சைகள் தினத்தையொட்டி, விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ-மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உதவிப் பேராசிரியர்கள் என்.ஹேமலதா, பி.எம்.அய்யாசாமி, டி.அரவிந்த் பிரசாந்த், ஆர்.தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago