தென்காசி மாவட்டத்தில் கார் நெல் அறுவடை மேற்கொண்டு வரும் விவசாயிகள் நெல்லை தங்கள் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு கார் பருவத்துக்கு தென்காசி மாவட்டத்தில் புளியரை, ரவணசமுத்திரம், கடையம், பண்பொழி, ஆழ்வார்குறிச்சி, கீழஆம்பூர், பாப்பான்குளம், கடையநல்லூர், செங்கோட்டை, சிந்தாமணி, கீழப்புலியூர், சம்பங் குளம், மேலஆம்பூர், சிவசைலம், வடகரை, சுந்தரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது.
நடப்பு அக்டோபர் மாதம் முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையாக மத்திய அரசு குவிண்டால் ஒன்றுக்கு சாதாரண நெல்லுக்கு 1,940 ரூபாயும், உயர் தரத்துக்கு 1,960 ரூபாயும் வழங்குகிறது. இத்தொகையுடன் தமிழக அரசு சாதாரண ரகத்துக்கு ஊக்கத்தொகை 75 ரூபாய் சேர்த்து 2,015 ரூபாயாகவும், உயர் தரத்துக்கு 100 ரூபாய் சேர்த்து 2,060 ரூபாயாகவும் வழங்க உள்ளது.
விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங் களை எளிய முறையில் www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்டவுடன் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில் விவசாயிகளுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இணைய வழியின் மூலமாகவே கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெறப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
இதன் அடிப்படையில் விவசாயிகள் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு ‘முதுநிலை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 9 எப், செயின்ட் தாமஸ் ரோடு, மகாராஜ நகர், திருநெல்வேலி’ என்ற முகவரியில் இயங்கும் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) நல்லமுத்துராஜா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago