ஜாதி சான்று வழங்க வருவாய் துறையினர் மறுப்பு : சலவை தொழிலாளர் நல குழு குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ஜாதி சான்று வழங்க வருவாய்த் துறையினர் மறுப்பதாக சலவைத் தொழிலாளர் நலக் குழு பொதுச் செயலாளர் த.ம.பிரகாஷ் குற்றஞ் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 6 லட்சம் புதிரை வண் ணார்கள் வாழ்ந்து வருகின்றனர். முடி திருத்தம் மற்றும் சவரம் செய்தல், சாஸ்திரம் சம்பிரதாய அடிப்படையில் குலத் தொழிலாக சடங்குகளை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்ற மின்றி உள்ளனர். அரசியல் ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஜாதி சான்றும் வழங்கப்படுவதில்லை. ஜாதி சான்று இல்லாததால் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து பின் தங்கியுள்ளனர்.

அரசுத் துறைகளில் சமரசமின்றி வேலைவாய்ப்பு கிடைக்க சட்டம் இயற்றவும், புதிரை வண்ணார்களுக்கு தனி வாரியம் அமைக்கவும், மாற்று தொழில் புரிவதற்கு தாட்கோ மூலம் கடன் வழங்கவும், புதிரை வண்ணார்களை கணக்கெடுத்து அடையாளப்படுத்தவும், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வணிக வளாகங்களில் இடம் ஒதுக்கீடு செய்யவும், பட்டியலினத்தவர்கள் வசிக்கும் பகுதியில் மதம் மாறிய புதிரை வண்ணார்களுக்கும் தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்கவும், விவசாய தொழிலாளர்களாக உள்ளவர்களுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கவும், ஜாதி சான்று வழங்கவும், இலவச உயர்கல்வி வழங்கவும், தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை பயில நிதி ஒதுக்கீடு செய்யவும், உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது மயானத்தில் அனுமதி பெறுவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு கவனம் செலுத்த வேண்டும் என 12 அம்ச கோரிக்கைகளை சலவைத் தொழிலாளர்கள் நலக்குழு வலியுறுத்தி வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அப்போதைய எம்எல்ஏ ரவிக்குமார் வலியுறுத்தியதால், புதிரை வண்ணார் நல வாரியத்தை திமுக அரசு கடந்த 15-10-2009-ல் அறிவித்தது.

நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து நலத்திட்ட உதவிகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த நலத்திட்ட உதவிகளை பெற, ஜாதி சான்று அவசியமாகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிரை வண்ணார் என்ற ஜாதி கிடையாது என கூறி வருவாய் துறையினர் விரட்டுகின்றனர்.

ஆட்சியர்கள் தனி கவனம்...

இதேநிலை தமிழகம் முழுவதும் உள்ளது. புதிரை வண்ணார்களுக்கு ஜாதி சான்று கிடைக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், புதிரை வண்ணார் ஜாதி சான்று பெற்றுள்ள ஒரு சிலருக்கு, வாரியத்தில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்க மறுக்கின்றனர். இது தொடர்பாகவும் ஆட்சி யர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்