தி.மலையில் படைவீடு நாவல் ஆய்வரங்கம் :

திருவண்ணாமலை சம்புவராயர் ஆய்வு மையம் சார்பில் படைவீடு நாவல் ஆய்வரங்கம் திருவண் ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

சம்புவராயர் ஆய்வு மையத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிஞர் கோ.எதிரொலிமணியன் தலைமை வகித்தார். தமிழ்ச்சங்கம் சி.துரை, சம்புவராயர் ஆய்வு மையம் அ.வே.பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சம்புவராயர் ஆய்வு மையம் இரா.காளிதாஸ் வரவேற்றார்.

படைவீடு நாவல் குறித்து ஒலி, ஒளி காட்சியுடன் நாவல் ஆசிரியர் தமிழ்மகன் முன்னுரை வழங்கினார். மூவேந்தரின் காலமும் சம்புவராயர்களின் தனியரசும் எனும் தலைப்பில் எஸ்கேபி கல்வி குழும தாளாளர் எஸ்.கே.பி.கருணா, நாவலில் இடம்பெறும் போர்களும் அரசியல் காரணங்களும் எனும் தலைப்பில் மகிழும் தமிழ்ச்சங்க தலைவர் சீனி.கார்த்திகேயன், நாவலின் காலமும் சமூக சூழலும் எனும் தலைப்பில் தம்மம் சிந்தனையாளர் வெற்றி சங்கமித்ரா, 100 ஆண்டுகள் ஆட்சியும் நிராகரிப்பும் எனும் தலைப்பில் தி.மலை தமிழ்சங்க பொதுச் செயலாளர் காதர் ஷா ஆகியோர் உரையாற்றினர்.

படைப்பாளிகள் பேரியக்கம் தலைவர் கவிஞர் ஜெயபாஸ்கரன் சிறப்புரையாற்றினார். கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி முதல்வர் கவிஞர் சித்ரா, தமிழ் மருத்துவ கழகம் தலைவர் தெ.வேலாயுதம், கவிஞர் இரா.பச்சையப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை முனைவர் அமுல் ராஜ் தொகுத்து வழங்கினார். முடிவில், முகேஷ் ரேணு நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE