தென்கரும்பலூர் கிராம சபை கூட்டத்தில் - 32 பயனாளிகளுக்கு ரூ.22.44 லட்சத்தில் நலத்திட்ட உதவி : பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

தண்டராம்பட்டு அருகே தென் கரும்பலூர் ஊராட்சியில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் 32 பயனாளிகளுக்கு ரூ.22.44 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென் கரும்பலூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் வரவேற்றார். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு ரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கிராம சபைக் கூட்டம் தொடங்கப்பட்டது. மக்களின் உணர்வுகளை புரிந்து, வழி நடத்துவதுதான் ஊராட்சி மன்றத்தின் பணியாகும்.

அதற்காகத்தான் கிராம சபை கூட்டம் என்ற திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்து சிறப்பாக வழி நடத்தினார்.

முதல்வர் ஸ்டாலின் ஆணை

கிராம ராஜ்ஜியம் தேவை என்று சொன்னவர் மகாத்மா காந்தி. வீட்டு மனைப்பட்டா, சாலை பராமரிப்பு, கழிவுநீர் கால்வாயை தூய்மைப்படுத்துதல், புதிய பாலம் கட்டுதல், புதிய அங்கன்வாடி மையம் கட்டுதல், புதிய நியாய விலை கடை கட்டுதல் என கிராமத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.

ஊராட்சிகளுக்கு செய்ய வேண்டிய பணியை சரியாக செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை யிட்டுள்ளார்” என்றார்.

இதையடுத்து, வருவாய், வேளாண், கூட்டுறவு, மாற்றுத் திறனாளிகள் நலம், தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித் துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 32 பயனாளிகளுக்கு ரூ.22.44 லட்சம் மதிப்புள்ள நலத்திட்டட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, சட்டப் பேரவை உறுப்பினர் கிரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE