கோவை, திருப்பூரில் விடிய விடிய பெய்த மழை :

By செய்திப்பிரிவு

கோவையில் விடிய விடிய பெய்த சாரல் மழையால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், சிங்காநல்லூர், ராமநாதபுரம், உக்கடம், சுந்தராபுரம், வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. மாநகரில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் காணப்படும் பள்ளங்களிலும் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

கோவை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்): அன்னூர் 16, மேட்டுப்பாளையம் 23, சின்கோனா 14, சின்னக்கல்லாறு 15, வால்பாறை 4, சோலையாறு 6, சூலூர் 5.5, பொள்ளாச்சி 20, கோவை தெற்கு தாலுகா 2, விமானநிலையம் 8.6, பெரியநாயக்கன்பாளையம் 7.6, வேளாண் பல்கலை. 6 மி.மீ.

தொடர் மழையால் கோவைக்கு குடிநீர் வழங்கும் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று சிறுவாணி அணையில் நீர்மட்டம் 42.64 (மொத்த உயரம் 45) அடியாகவும், பில்லூர் அணையில் நீர்மட்டம் 79.50 (மொத்த உயரம் 100) அடியாகவும் இருந்தது.

பள்ளிகளுக்கு விடுமுறை

திருப்பூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. இதனால், குன்னத்தூர் அடுத்த கருமஞ்செறை ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இரண்டடி உயரத்துக்கு தண்ணீர் வந்ததால், பாடப் புத்தகங்களும், பொருட்களும் வீணாகின. இரவு நேரத்தில், குழந்தைகளும், முதியோரும் தூங்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு 26 மிமீ, அவிநாசி 13, ஊத்துக்குளி 39, தாராபுரம் 37, மூலனூர் 22, குண்டடம் 32, வெள்ளகோவில் 36, ஆட்சியர் அலுவலக முகாம் குடியிருப்பு 45 மிமீ என மழை பதிவானது.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால், நேற்று காலை பல்வேறு பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவாக இருந்தது. இதனால் நேற்று மதியம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அரைநாள் விடுப்பு அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்